×

மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு: அமைச்சர் செங்கோட்டையன், கருப்பணன் ஆகியோர் பங்கேற்பு.!!!

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு பாசனத்துக்காக கால்வாய் திறக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் மிகப்பெரிய நீர்த்தேக்கமாக மேட்டூர் அணை விளங்கி வருகிறது. இந்த அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம். அதன் அடிப்படையிலேயே ஜூன் 12ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட்டார். அதேபோல கிழக்கு, மேற்கு கால்வாய் மூலம் ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள 45,000 ஏக்கர் நிலங்கள் பயனடைவதற்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

 ஆகஸ்ட் 1ம் தேதியன்று இந்நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். தொடர்ந்து இந்த மதகுகளை கைகளால் இயக்கிய நிலையில், அவை தற்போது மின்மயமாக்கப்பட்டுள்ளது.  97 லட்சத்து 98 ஆயிரம் மதிப்பீட்டில் கால்வாய் திறக்க மோட்டார் பொருத்தப்பட்டுள்ள நிலையில், மின்சக்தி மூலம் மதகுகள் திறக்கப்பட இருக்கிறது. அதற்காக 17 நாட்கள் செலவிடப்பட்டதின் காரணமாக தற்போது 17 நாட்கள் தாமதமாக இன்றைய தினம் கிழக்கு, மேற்கு கால்வாய் வழியாக பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று முதல் டிசம்பர் 31 ம் தேதி வரை 137 நாட்கள் தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார் .

இதன்படி இன்று காலை 9.45 மணியளவில் கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, கே.சி. கருப்பணன், சரோஜா ,மாநிலங்களவை உறுப்பினர் சந்திர சேகரன், சட்டமன்ற உறுப்பினர் செம்மலை உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். மாவட்ட ஆட்சியர் ராமன், பொதுப்பணித் துறை கண்காணிப்பு பொறியாளர் ஜெயகோபால் உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர். முதல் கட்டமாக 500 கனஅடியில் தொடங்கி 1,000 கனஅடி வரை நீர் திறப்பு உயர்த்தப்படும்.

 கால்வாயில் தண்ணீர் திறந்துவிடுவதன் மூலமாக, சேலம் மாவட்டத்தில் 16,443 ஏக்கர் பரப்பும், நாமக்கல் மாவட்டத்தில் 11,327 ஏக்கர் ஏக்கர் பரப்பளவும் அதேபோல ஈரோடு மாவட்டத்தில் 17,230 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்களும் பயனடையவுள்ளது. மொத்தம் 45,000 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறுகிறது. குறிப்பாக கிழக்கு கால்வாய் மூலம் 27,000 ஏக்கரும், மேற்கு கரை கால்வாய் மூலம் 18,000 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகிறது.

Tags : Karuppanan ,Mettur Dam ,Minister Senkottayan , Water Opening for East and West Canal Irrigation from Mettur Dam: Participation of Minister Senkottayan and Karuppanan !!!
× RELATED மேட்டூர் அணையில் செத்து மிதக்கும்...